மும்பையில் தொலைந்து போனவர்கள் - தமிழ் இலெமுரியா

22 October 2017 12:13 pm

மும்பை நகரில் சிலரை சந்திக்க நேரிட்டபோது, எப்போதோ ஒரு கவிஞர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ‘‘தற்கொலைக்கு தைரியம் இல்லாததாலும், கொலை செய்ய துணிவு இல்லாததாலும் நான் கதையும் & கவிதையும் எழுதுகிறேன்’’ என்று.வேலை தேடியும், வெவ்வேறு குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், குற்றங்கள் செய்துவிட்டு தப்பிக்கவும் மும்பை நகருக்கு தினமும் பலர் ஓடிவந்து கொண்டே இருக்கின்றனர். சிலரது லட்சியம் நிறைவேறுகிறது. சிலர் கனவு உலகில் மிதக்கின்றனர். சிலர் இடைப்பட்ட நிலையில் சிக்கி சீரழிகின்றனர். இன்னும் சிலர் சொந்த பந்தங்களை மறந்து விதியை நினைத்து வேதனைப் படுகின்றனர்.பந்த, பாசத்தை மறந்து முகம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் முகவரி இல்லாத மனிதர்கள் இந்த மாநகரத்தில் பலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சயான்&கோலிவாடாவைச் சேர்ந்த லட்சுமணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)லட்சுமணுக்கு 79 வயதாகிறது. தனது உடன் பிறந்த சகோதரி வழிதவறிச் சென்று கர்ப்பமானதால் அவமானம். அதை தாங்க முடியாமல் கண்காணா தொலைவுக்கு சென்று விடுவோம் என்று கள்ளரயில் ஏறி மும்பை வந்தவர் லட்சுமண். பிழைப்புக்காக பல்வேறு தொழில்கள் பார்த்த லட்சுமணுக்கு கடைசியில் கை கொடுத்தது கள்ளச்சாராயம். மொத்தத்தில் ஒரு கள்ளச்சாராய வியாபாரி ஆனார். பணம் கையில் புரளத் தொடங்கியதும் ‘பந்தா’ காட்டிய லட்சுமண் அந்த பகுதிக்கு குட்டி தாதாவானார். மனதுக்கு பிடித்த மாற்று மாநில பெண் ஒருத்தியை காதலித்து மணந்து கொண்டார். குடும்ப வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு மகனும் உண்டு. மனைவி இறந்து போனதால் லட்சுமண் இப்போது தனிமரம். தள்ளாத வயதில் தனது மகனின் தயவில் வாழ்க்கை நடத்துகிறார். இந்த நிலையிதான் நாம் அவரை சந்தித்தோம். கடந்த காலத்தை நம்மோடு நினைவு கூர்ந்தார்.ஊரைவிட்டு அன்று மும்பைக்கு ஓடி வராமல் இருந்திருந்தால் இரட்டைக் கொலை குற்றவாளியாகியிருப்பேன் அல்லது தற்கொலை செய்திருப்பேன். இங்கு ஓடி வந்ததால் உயிருடன் இருக்கிறேன். ஆனால் முகவரி தொலைந்து போனது. உற்றார் & உறவினர்கள் மறந்துவிட்டனர். அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத அனாதையாகிவிட்டேன்.சொந்த ஊரைப் பார்க்க வேண்டும், சொந்த பந்தங்களுடன் பேச வேண்டும், பழக வேண்டும் என்றெல்லாம் ஆசைகள் உண்டு. அவர்களை பார்க்க பலமுறை முயன்றேன். ஏதோ என்னை போகவிடாமல் தடுத்தது போன்ற உணர்வு. உற்றார் & உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது எதுவும் தெரியாது. நான் உயிருடன் தான் இருக்கிறேனா, இல்லையா என்பது அவர்களுக்கும் தெரியாது. தெரிந்து கொள்ள அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. கடந்த கால நினைவுகளை அசைபோடும்போது கண்கள் குளமாகிறது. நெஞ்சு பதைபதைக்கிறது. வேதனை நெஞ்சை அடைப்பதால் அதை தடுக்க நான் பயன்படுத்தும் மருந்து பட்டை சாராயம். சொர்க்கம் & நரகம் எல்லாம் இந்த சாராயம்தான் என்றார்.மதுவுக்கு அடிமையாகி மனம் தடுமாறி நடக்கும் லட்சுமண் இப்போது தொலைந்து போன முகவரியை சாராயத்துக்குள் தேடுகிறார். தேடிக்கொண்டே இருக்கிறார்.மும்பை சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுராவில் சந்தித்த நண்பரின் நிலை சற்று வித்தியாசமானது. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் ‘பார் வாலா’வாக வேலை செய்து வருகிறார். பார்வாலா என்றால், ஓட்டலை சுற்றியுள்ள விபச்சார விடுதிகளில் ‘தொழில்’ நடத்தும் பெண்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஆர்டரின் பேரில் டீ, காபி போன்ற உணவுகளை எடுத்துச் சென்று கொடுப்பது. அப்படி எடுத்து சென்று கொடுக்கும் பொருட்களின் மொத்த விற்பனையில் குறிப்பிட்ட கமிஷன் சம்பளமாக கிடைக்கும்.மும்பை வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை சொந்த பந்தங்களைப் பார்க்க பாபு ஊருக்கு சென்றதே இல்லை. இத்தனை காலம்வரை காமாத்திபுரா பகுதியிலேயே சுற்றித் திரிந்து வாழ்க்கை நடத்தி வருகிறார். சம்பாதித்து நல்ல வசதியுடன் ஊருக்குச் சென்று உறவினரை சந்திக்க வேண்டும் என்பது பாபுவின் ஆசை. சாதி, ஜனங்களை காண வேண்டும் என்ற எண்ணம் பாபுவின் மனதில் அவ்வப்போது எழும். வசதி இல்லாததால் அந்த ஆசையும் தானாக மறைந்து போகும்.வருடங்கள் பல ஓடிவிட்டதால், பாபுக்கும், உறவினர்களுக்கும் இடையிலான உறவு மெல்ல மெல்ல துருப்பிடித்து முறிந்துபோனது. தாம் தனிமை படுத்தப்பட்டு விட்டோம். அனாதையாகி விட்டோம் என்ற கவலை பாபுவின் மனதை கவ்விக் கொண்டது. கவலை வரும்போது குடிக்கத் தொடங்கிய பாபுக்கு இப்போதெல்லாம் குடிக்காமல் தூக்கம் வராது.தனிமையை எண்ணித் தவித்து வந்த பாபுவுக்கு ஒரு கட்டத்தில் சத்தியவதியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலானது. காதலின் ஆழம் அதிகமானபோது தனது வாழ்க்கையிலும் வசந்தம் வரும் என்று நம்பினார் பாபு. சத்தியவதியையே திருமணம் செய்யவும் பாபு முடிவு செய்தார்.சத்தியவதியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். காமாத்திபுராவில் விலைமகளாக ‘தொழில்’ செய்து வந்தார். பாபுவுடன் காதல் ஏற்பட்டதும் அவரை மணந்து கொள்வதாகவும் சத்தியவதி கூறினாள்.சத்தியவதியுடன் ஏற்பட்ட நட்பு பாபுக்கு புதிய தைரியத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் மனைவியாக கிடைக்க எதையும் செய்ய தயாரானார் பாபு.விளைவு பாபுவின் பணப்பை காலியாகத் தொடங்கியது. Êசத்தியவதியுடன் குடும்பம் நடத்துவதாகவே கனவு காணத் தொடங்கிய பாபு நிஜமாகவே அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். விபரத்தை சத்தியவதியிடம் தெரிவித்து விபச்சார விடுதியை விட்டு வெளியே வரும்படி அழைத்தார்.விடுதியைவிட்டு வெளியே வரவேண்டுமானால் விடுதி  தலைவிக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சத்தியவதி கண்டிஷன் போட்டாள். எப்படியாவது வாழ்க்கைக்கு துணை கிடைத்தால் போதும் என்றிருந்த பாபு, தானே அவளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து வெளியே வரும்படி அழைத்தார். திருமண ஏற்பாடுகளுடன் மறுநாள் வரும்படி சத்தியவதி கூறி அனுப்பினாள்.மறுநாள் மாப்பிள்ளை கோலத்தில் சத்தியவதியை அழைக்கச் சென்ற பாபுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணத்துடன் பஞ்சாய் பறந்துவிட்டாள் சத்தியவதி. நிலைகுலைந்து போனார் பாபு. சத்தியவதியின் விசுவாசவஞ்சனையை பாபுவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கவலையை மறக்க மீண்டும் மதுவின் துணையை நாடிச் சென்றார்.‘‘என்னை பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும், உறவினர்களும் என்னை மறந்துவிட்டனர். சொந்த பந்தங்களே என்னைப் பற்றி கவலைப்படாத நிலையில், கேவலம் விலைமகளான சத்தியவதி ஏமாற்றியதை பெரிசாக நினைக்கவில்லை. எல்லாம் விதிப்படி தான் நடக்கும்’’ என் விதிமீது பழியை போட்டு பேசுகிறார் பாபு.‘இப்போது எவரைப் பற்றியும் பாபு கவலைப்படுவதே இல்லை. வேலை செய்ய வேண்டியது, கிடைக்கும் பணத்துக்கு குடிப்பது, குஷி ஏற்பட்டால் குட்டிகளுடன் சேர்ந்து இருப்பது இதுவே பாபுவுக்கு பிடித்தமான விஷயங்களாக மாறிவிட்டது. வாழ்க்கை மீதே விரக்தி, மனிதப்பிறவி எடுத்ததே பாவம் என்று கருதுகிறார்.நாம் சந்திக்க நேர்ந்த மற்றொரு நபர் பிரபலமான ஒரு காண்ட்ராக்டர். மும்பை வந்து செலவுக்கு அதிகமாக சம்பாதித்து வசதிகளுடன் இருக்கிறார். வசதிகள் அதிகரித்தபோது, தனது சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும் முடிந்த உதவி செய்வோம் என்று முடிவு செய்தார். அதற்காக தாம் நடத்தி வந்த தொழில் நிறுவனத்தின் கிளை ஒன்றை சொந்த ஊரிலும் தொடங்கினார்.தொழில் தொடங்குவதற்காக பெரும் தொகையை தனது சகோதரர்களிடம் ஒப்படைத்தார். உடன் பிறந்தவர்கள் தானே என்று அவர்கள் கேட்டபோது எல்லாம் பெரும் தொகைகளை அனுப்பினார். நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரர்கள் பணம் முழுவதையும், தொழில் தொடங்க வாங்கிய நிலத்தையும் அபகரித்துக் கொண்டனர்.உண்மை தெரிந்து நியாயம் கேட்கச் சென்ற அவருக்கு ஊரில் அடி & உதை விழுந்தது. சில காவல்துறை அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் காசுக்கு ஆசைப்பட்டு துரோகிகளுக்கு ஆதரவாக பேசினார்கள். காண்ட்ராக்டரின் நியாயப் போராட்டம் துரோகிகள் முன்னால் தோற்றுப்போனது. அன்று அவர் எடுத்த சபதம், இந்த ஊரில் இனிமேல் கால் வைக்கவே கூடாது என்று அதன் பின்னர் மீண்டும் மும்பை வந்த அவர் சொந்த ஊரை மிதித்ததே இல்லை.மும்பைக்கு வந்தால் எப்படி சொந்த பந்தங்களை தொலைத்தவர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது பாருங்கள்! ஒவ்வொருவர் வாழ்க்கைக்குப் பின்னாலும் விதவிதமான கதைகள். அவர்களில் கணிசமான ஒரு பிரிவினர் வெளிநாட்டு தொழில் ஆசையால் ஏமாந்துப் போனவர்கள். கவலைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு எப்படியாவது வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போம் என்று அவர்களும் மும்பை நகரில் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி