இழப்பும் பிழைப்பும் - தமிழ் இலெமுரியா

17 December 2016 1:53 pm

தமிழ்நாட்டு அரசியல் தளம் மட்டுமன்றி இந்திய அரசியல் தளத்திலும் ஒரு மாபெரும் வலிமை மிக்க அரசியல் வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் அகால மறைவு தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் சொந்த தகுதி, திறமை, அனுபவம், அரசியல் வியூகங்கள் மூலம் அ.இ.ஆ.தி.மு.க என்ற கட்சியை வழி நடத்தியதுடன் அவருடைய தனிமனித ஆளுமையை பிறரால் கேள்வி கேக முடியாத அளவிற்கு வளர்த்துக் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப் பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை நீதிக்கட்சியின் நீட்சியாகவும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட சமுக மறுமலர்ச்சிக் கொள்கைகளையும், தமிழ்மொழி மேம்பாட்டையும் வளர்த்தெடுக்கும் ஓர் இயக்கமாகவும் கட்சி அரசியலில் தடம் பதித்திருப்பதாகவே அறிவித்தது. எனினும் காலச்சூழலில் ஏற்பட்ட மத்திய மாநில அரசியல் நகர்வுகள், போட்டிகள் இக்கொள்கைகளை சிறுகச் சிறுக மழுங்கச் செய்திருந்தாலும் அதன் ஆணிவேரை இழ்ந்து விடவில்லை. அந்த அடிப்படைத் தன்மையே தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சற்றொப்ப அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஏதேனும் ஒன்றின் கீழ் தொடர்ந்து ஆட்சி அமைய உதவி வருகிறது. இந்த உண்மையையும் மக்களின் பாமரத் தன்மைகளையும் நன்கு புரிந்து கொண்டு எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின்னர் அ.இ.அ.தி.மு.க என்ற கட்சியை தன் வசப்படுத்திக் கொண்டவர் ஜெயலலிதா. தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டியவர். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தன் அறிவின் மீதும் ஆற்றலின் மீதும் மக்கள் துணையின் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட்டவர். திராவிடஇயக்க அடிப்படை கொள்கைகளுக்கு மாறுபட்ட போக்கு செல்வி ஜெயலலிதா என்ற தனிமனிதச் செயல்பாடுகளில் அதிகம் வெளிப்பட்டுள்ளன. ‘நான்’ ‘நான்’ என்று பேசுகின்ற ஆணவப் போக்கு, மிக அதிக தன்மதிப்பு, எளிதில் நெருங்க முடியாமை, எதிர்க் கட்சிகளிடம் நல்லுறவுப் பேணாமை, மதிப்பளிக்காமை, பிடிவாதம், ஆடம்பரம், மூடநம்பிக்கை என இவருடைய பல குணங்கள் தமிழ்நாட்டு அரசியலில் மாறுபட்ட கொள்கைகளுக்கு அப்பால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவு, சனநாயகக் கோட்பாடுகள் ஆகியவற்றை மங்கச் செய்தன. தீமைகளை விளைவித்தன. இதன் விளைவாக அமைச்சர்கள் அடிமைகளாயினர். அதிகாரப் பரவல் அறவே ஒழிந்தது. பொது நிகழ்ச்சிகளில் கூட கட்சி அரசியலின் வெறுப்பும் தீண்டாமையும் வெளிப்பட்டது. அரசும் கட்சியும் ஜெயலலிதா என்ற பெண்மணியின் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒன்றாக மாற்றம் பெற்றது. மதுவின் போதைக்குத் தமிழ் மக்கள், மாணவர்கள் அடிமையாயினர். இந்த இழிநிலைகள் குறித்து கடந்த காலங்களில் நாம் நம்முடைய கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வந்துள்ளோம். ஆனால் ஆணாதிக்கமும் இரண்டகமும் நிறைந்த இந்திய அரசியல் தளத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்பதற்காகவும் வெற்றிகளை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் அவர் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட அரசியல் வியூகமாகவும் மேற்கண்ட குணங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். மேற்கண்ட விமர்சனங்களுக்கிடையில் செல்வி ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத் தகுந்தவை ஆகும். குறிப்பாக சமுக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் 69 விழுக்காடு சட்டத் திருத்தம், காவிரி நீர்ச் சிக்கலில் மத்திய அரசுக்குக் கொடுத்த அழுத்தம், தமிழ் ஈழ ஆதரவு நிலைப்பாடு, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி சட்டமன்ற தீர்மானம், இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டி மேற்கொண்ட நடவடிக்கை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், சிறு வணிகர்களுக்கு எதிராகவும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட மத்திய அரசுன் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, என செல்வி ஜெயலலிதாவின் பல நிலைப்பாடுகள் தமிழ்நாட்டு மாநில உரிமைகளுக்கு ஆதரவாக அமைந்த நிகழ்வுகளாகும். எனவே செல்வி ஜெயலலிதாவின் திடீர் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் பேரிழப்பு ஆகும். இந்த இழப்பும் கட்சியின் பிழைப்பும் கேள்விக்குரியதாகி உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் பல அரசியல் தலைவர்கள் எதிர்பாரா மறைவைச் சந்தித்துள்ளனர். ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாசுத்திரி, இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி, அண்ணா என பலரை வரிசைப்படுத்தலாம். ஆனால் இந்த தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களோ அல்லது அவர்களின் குடும்ப வாரிசுகளோ அவ்விடத்தை நிரப்பி வந்துள்ளனர் என்பது வரலாற்றுப் பதிவுகளாகும். தற்போது அந்நிலை ஜெயலலிதாவின் மறைவில் காணப்படவில்லை. இன்று அ.இ.அ.தி.மு.க எதிர்பாராது ஓர் வலிமை இழந்த கட்சியாகக் காட்சியளிக்கின்றது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தன் இருப்பையும் வளர்ப்பையும் நிலை நிறுத்திக் கொள்ள பிற கட்சிகள் முயல்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகின்றது. குறிப்பாக பா.ச.பா கட்சியின் நிருவாகிகளும் அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு உள்ளும் புறமும் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் செயல்பாடுகள் காட்சி தந்தன. அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், புதிய முதலமைச்சர் தேர்வு, பதவி ஏற்பு விழா ஆகிய அனைத்தும் ஜெயலலிதாவின் மறைவு அறிவிப்புக்கு முன்னரே யாருடைய வழிகாட்டுதலின் பேரில் நடந்தேறின என்பது தமிழ்நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்தியாவில் ஒரே ஒரு மாநிலம் மட்டுமே அரை நூற்றாண்டுக்கு மேலாக மாநில அரசியல் கட்சிகளின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்குவதை வட இந்திய அரசியலாளர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. நடுவண் ஆட்சியாளர்கள் எந்தக் கட்சியினராயினும் தமிழ்நாட்டுடன் அண்டை மாநில விரோதப் போக்கை வளர்ப்பதற்கு துணை நிற்பதும் மத்திய அரசிடம் மண்டியிட வேண்டுமென நினைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். இது தவிர கட்சிக்குள் சில அதிகார மையங்கள் தங்கள் ஆதிக்கத்தை உறுதிசெய்வதற்காக சாதி அரசியல், பொருள் அரசியல் என பல கயமைகளைச் செய்ய முனைந்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பணியும் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களும் ஏராளம் இருக்கும். முன்னைய தற்காலிக முதல்வர் போன்று எளிமையான பணியாக அமைய வாய்ப்பில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சித் திறன், தேர்தல் வாக்குறுதிகள் போன்றவற்றின் அடிப்படையில் பெருவாரியான இருக்கைகளைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள அ.இ.அ.தி.மு.க முழுமையாக ஐந்து ஆண்டுகள் தன் கொள்கைகள் வாக்குறுதிகள் நிறைவேற்றும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். மிக அறிவார்ந்த ஆட்சிப் பணியாளர்களை அதிகம் கொண்ட ஒரு மாநிலம் தமிழ்நாடு ஆகும். புதிய முதலமைச்சர் எவ்வித சாதி மத சார்புகளுக்கும் தனி மனித அதிகார மையங்களுக்கும் பிற கட்சிகளின் வழிகாட்டுதலுக்கும் தன்னை உட்படுத்தாமல் நல்ல அதிகாரிகளை தன் ஆலோசகர்களாக நியமித்து தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவத்ஏ தங்களின் எதிர்கால அரசியலுக்கும் அ.இ.அ.தி.மு.க என்ற கட்சிக்கும் பெருமை சேர்க்கும் என பொறுப்புணர்வோடு உணர்த்துகின்றோம். தமிழ்நாட்டு மக்களின் தனித்துவமும் மாண்புகளும் காக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுடன் நல்லுறவைப் பேணி சனநாயகப் பண்புகளுடன் ஒரு புதிய தமிழகத்தை ஓ.பன்னீர் செல்வம் தருவார் என்று எதிர்பார்க்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை திருக்குறள் (636) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்S.KUMANA RAJANEditor In Chiefமார்கழி – 2047(டிசம்பர் – 2016)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி