15 September 2015 5:01 pm
உலகில் தொன்மையும் நாகரிகச் சிறப்பும் மொழி வளமும் பண்பாடும் நெடிய வரலாறும் கொண்ட சில இனங்களில் தமிழினம் முதன்மையானது ஆகும். சங்க காலம் தொடங்கி தமிழ் மொழி பேசும் மக்களின் வாழ்விட எல்லைகள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு கரணியங்களால் மாற்றம் பெற்றுள்ளன. எனினும் இன்றளவும் தமிழரின் தாயகமாக சுட்டப்படுவது இந்திய நாட்டின் எல்லைக்குள் அதன் ஒரு மாநிலமாக அமைந்திருக்கும் தமிழ் நாடு மட்டுமே ஆகும். சிந்து வெளி நாகரிக ஆய்வுகள் தமிழ் மொழியின் தகைமையைத் தரணிக்கு எடுத்துரைப்பதாய் அமைகின்றன. ஒரு காலத்தில் இந்திய துணைக் கண்டம் முழுமையும் தமிழின் செழிப்பு செழித்தோங்கியதாக வரலாற்று ஆய்வுக் குறிப்புகள் செப்புகின்றன. தமிழின் தோற்றமும் துவக்கமும் எப்போது என்று எளிதாக விடை சொல்ல இயலாத அளவுக்கு ஒப்பிலா நிலையில் தமிழினம் பரந்து அரசோச்சியுள்ளது. பல நூற்றாண்டுகளாக மூவேந்தர் ஆட்சி என்பது இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதி முழுமையாக ஆளப்பட்டு பின்னர் தம் தனித்துவ அடையாளங்களை இழந்து சுருங்கிப் போனவையும் நம் வரலாற்று அடையாளங்கள் ஆகும். பிரிட்டிசு ஆக்கிரமிப்பாளர்களின் வருகைக்குப் பின்னர் திராவிட மொழிக் குடும்பத்தின் தாயகமாக சென்னையைத் தலைநகராகக் கொண்டு பெரு மாகாணமாக விளங்கி இந்திய விடுதலைப் போரின் துவக்கமாகவும் விளங்கியது தமிழ் நாடு ஆகும். அன்றைய சோழப் பேரரசின் ஒரு பகுதியாக இன்றைய கருநாடகமும், சேரப் பேரரசின் ஒரு பகுதியாக இன்றைய கேரளமும் விளங்கியவை, பின்னர் சென்னை மாகாணத்திற்கு உட்பட்டவையாக இருந்தவை எனினும் 1956 ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலப் பகுப்பிற்குப் பின்னர் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வாழ்விடங்கள் சில கருநாடக எல்லைக்குள்ளும், சில ஆந்திர மாநில எல்லைக்குள்ளும் இன்னும் சில கேரள மாநில எல்லைக்குள்ளும் வலிந்து சேர்க்கப் பட்டவையாகும். அந்த நாளிலிருந்து பெங்களூரு, கோலார் தங்கவயல், கொள்ளேகல், சித்தூர், திருப்பதி, புத்தூர், தேவி குளம், பீர் மேடு பாலக்காடு, மூணாறு, இடுக்கி போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் தாய்மண்ணை இழந்தனர். தொடர்ந்து தம் தாய் மொழியையும் இழந்தனர். இந்திய விடுதலை நமக்கு வெளிச்சம் காட்டும் என்று நம்பியிருந்த இம்மக்களின் மொழி, இன பண்பாட்டுக் கூறுகள் இருளில் மூழ்கின. இது ஒருவகையான வலிந்து புலம் பெயர்க்கப் பட்ட புலம் பெயர்வு ஆகும். இவை தவிர்த்து பிரிட்டிசார் காலத்திலும் மொழி வாரி மாநில பகுப்பிற்குப் பின்னரும் பிழைப்பைத் தேடியும் உழைப்பை விற்பதற்கும் சமுக அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும் வணிகம் செய்வதற்குமென வாழ்வைத் தேடி நிகழ்ந்த புலம் பெயர்வுகள் அந்தமான் நிக்கோபர் தீவு, மகாராட்டிரம், கருநாடகம், ஆந்திரம், வட இந்திய மாநிலங்கள் என இந்திய நாட்டின் பிற மாநிலப் பகுதிகளாகும். பெரும்பாலான இப்புலம் பெயர்வுகள் ஒடுக்கப் பட்ட உழைக்கும் மக்கள் பிரிவைச் சார்ந்தவையாகும். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் மக்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரிய ஒன்றாகும். பல்வேறு படிநிலைகளில் அவர்களின் அரசியல் உரிமை, அடையாளங்கள் மறுக்கப் படுவதும் தாய்மொழிக் கல்வி, பண்பாட்டுக் கூறுகள் நசுக்கப் படுவதும் மாநிலச் சிக்கல்களில் எளிதில் வன்முறைகளுக்கு இறையாவதும் வரலாற்றில் தொடர்ந்து வருகின்ற பதிவுகளாகும். இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே அரசியல் சட்டம் எனினும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இந்திய இறையாண்மையும் அதன் தொடர்ச்சியான அரசமைப்பும் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளும் புலம் பெயர்ந்த இம்மக்களுக்கு கிட்டாத ஒன்றாகும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் ஓரிரு தலைமுறைக்குப் பின் தாய்மொழிக் கல்வியை கற்க வழியின்றி கலப்பின மக்களாகத் திரிந்து விடுகின்றனர். தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் சமுக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் இட ஒதுக்கீடு இம்மக்களுக்கு முற்றாக மறுக்கப் படுகிறது, வெளி நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்ய இந்திய அரசு ஒரு தனி அமைச்சகத்தையே, குறிப்பாக கேரள மக்களின் நலன் கருதி ஒரு அமைச்சரையே நியமித்துள்ளது. ஆனால் உரிமையிழந்து வாழும் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ முன் வருவதில்லை. மகாராட்டிரா மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் மராட்டிய அரசைப் பொறுத்த வரை வெளிமாநிலத்தவர்கள். மாநில அரசின் எவ்வித நலத்திட்டங்களையோ, மொழி பண்பாட்டு அடிப்படைக் கூறுகளையோ போற்றுவதற்கு தகுதியிழக்கின்றனர். அதே தமிழ் மக்கள் தமிழ் நாடு அரசின் பார்வையிலும் வெளி மாநிலத்தவர்கள். தமிழ் அரசின் எந்தத் திட்டத்தின் கீழும் எவ்வித நன்மையும் பெற்றிடத் தகுதி இல்லாதவர்கள். இது எந்த வகையான தேசியம் என்பது நமக்கு விளங்கவில்லை? பிற மாநில மக்கள் தமிழ் நாட்டில் முதலாளிகளாக புலம் பெயர்வதும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களை தக்க வைப்பதும் அவற்றை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் நாடு அரசு பண்டிகை கால விடுமுறை, தொழில் உதவி அளிப்பதும் யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்கிற தமிழர் கோட்பாட்டின் அடிப்படையிலாகும். ஆனால் தமிழர்களுக்குப் பிற மாநிலங்களில் இந்த நல்வாய்ப்பில்லை. பிற மாநிலங்களில் வாழ்ந்து தமிழர்களின் மொழி பண்பாடு அடையாளக் கூறுகளை முன்னெடுக்கும் பொருட்டு இலக்கிய ஆளுமையுடன், கவிஞர்களாக, எழுத்தாளர்களாக, இதழாளர்களாக, மொழி ஆசிரியர்களாக, அறிஞர்களாக விளங்கினாலும் அவர்கள் தமிழ் நாடு அரசின் சார்பில் தேர்வு செய்து அறிவிக்கப் படும் விருதுகளுக்கோ, உதவிகளுக்கோ கணக்கில் கொள்ளப் படுவதில்லை. இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை ஒரு நாடற்ற ஏதிலியின் நிலை போல் தான் உள்ளது. இந்திய நாட்டின் ஒற்றுமை என்பது உதட்டளவு சுரப்பாக; உரிமை என்பது ஏட்டளவு இருப்பாக; வேற்றுமையை விதைப்பதே நினைப்பாக உள்ளது. அவ்வப்போது பிற மாநிலத் தமிழர்களின் அழைப்பால் வந்து செல்லும் அரசியலாளர்களும் சிக்கல்களை தீர்த்து விடுவதாக பசப்பு மொழிகளை வீசி பாசாங்கு செய்கின்றனர். தேர்தல்களின் போது தமிழ் மக்களைத் தேடியும் நாடியும் கெஞ்சியும் கொஞ்சியும் வகை வகையான வாக்குறுதிகளை வாரிவிட்டுச் செல்கின்றனர். வாக்களிக்கத் தமிழன், வதை படவும் தமிழன், உழைத்திடவும் தமிழன், உதை படவும் தமிழன் என்கிற நிலையில் தான் தமிழர்கள் பிற மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். உடல் உழைப்பில் வலிமையும் நேர்மையும் மிக்க இனமாக விளங்கிய தமிழ் இனம் இந்தியாவின் பிற மாநிலங்களில் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளைக் கூட பெற இயலாது வாழும் நிலை இன்றளவும் தொடர்கின்றதே! இந்த நாட்டின் குடிமக்கள், இந்த நாட்டின் மாநிலங்களில் எந்தவொரு மூலையில் குடியிருந்தாலும் தனது தாய் நாட்டில் வாழ்கின்ற உணர்வோடும் உரிமையோடும் உவகையோடும் வாழவேண்டும். அது தான் இந்திய விடுதலையின் பொருளும் அருளும் ஆகும். அந்தத் தூய்மையும் வாய்மையும் தொண்டுள்ளமும் இன்றி இந்தியத் தேசியம் பேசுவது வஞ்சக நெஞ்சங்களின் வாய் வீச்சுகளே; வறட்டுச் செயல்களே! எனவே பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமைகளைப் பேணும் வகையில் வெளிநாட்டு இந்தியர்களுக்காக நடுவணரசு ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைச்சகம் போல புலம் பெயர்ந்து பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நலம் காக்கும் வகையில் ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்தப் படவேண்டும். தமிழினத்தின் விடியல் என்பது ஒட்டு மொத்தத் தமிழர்களின் விழிப்பில் தான் உள்ளது என்பதை உணர்ந்து தமிழர்களும் தமிழ் நாட்டை ஆளும் அரசுகளும் செயல்பட முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். நம்பிக்கை நனவாகட்டும். தமிழர் வாழ்வில் ஒளி வீசட்டும். ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி (குறள் 1022) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor in Chiefபுரட்டாசி – 2046(செப்டம்பர் – 2015)"