ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் - தமிழ் இலெமுரியா

16 December 2015 4:04 pm

நவீன தாராளமயமாக்கலின் இதயமாக விளங்கும் உலகமயமாக்கலின் துரித வேகமானது உலகின் பல்வேறு நாடுகளில் பெருவாரியாக வாழும் சாதாரண மக்களின் மத்தியில் வெறுப்பையும் (அதிருப்தியையும்) மன வருத்தத்தையும் ஏற்படுத்தும் விதமாக ஏற்றத்தாழ்வுகளை அதிக அளவில் விளைவித்துள்ளது.உலக அளவில் பெருகி வரும் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய எழுத்துப் புரட்சி : பொது மக்களுக்கும் சமுகத்தின்  மிகச் சிறிய பிரிவுகளாக விளங்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான அகண்ட விரிசலாக சித்தரிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற சிந்தையாளர்களும் பொருளாதார நிபுணர்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். தாமசு பிக்கிடி எழுதிய இருபத்தொன்றாம்  நூற்றாண்டின்  மூலதனம்" எனும்  நூலில்  உலகிலுள்ள ஏற்றத்தாழ்வுகளின்  ஆபத்தான நிலையை மிகத்  துல்லியமாக ஆய்வு செய்துள்ளார். அதே போன்று வறுமையில்  வாடும்  பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மை செல்வந்தர்களுக்கும் மத்தியில் அவர்களின்  வருமானத்தில்  ஏற்படும்  மிகப்  பெரிய இடைவெளியின் காரணமாக உலகின்  பொருளாதார முன்னேற்றமும்  மேம்பாடும்  தடைபடுகிறது என நோபல்  பரிசு பெற்ற ஜோசப்  ஸ்டிக்லிட்ஸ்  வலியுறுத்திக்  கூறியுள்ள "ஏற்றத்தாழ்வுகளின்  விலை" எனும்  புத்தகம் மற்றொரு மைல்  கல்லாகும். இலண்டன் கார்டியன் நாளிதழிலிருந்து வெளியான ஒரு கட்டுரையில் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது வெடிக்கும் நிலையில் உள்ள ஒரு மணி வெடிகுண்டு (டைம் பாம்) போன்றது என விவரிக்கப்பட்டுள்ளது. சமத்துவமின்மை சிக்கல் குறித்து உலகளாவிய அறிஞர்களும் சிந்தனையாளர்களும் கவலை கொண்டுள்ள இச்சூழலில், வளமான சமுக மற்றும் பொருளாதார ஒழுங்கை உருவாக்குவதற்கு சமுக, பொருளாதார ஏற்றத்தாழ்வை அகற்ற வலியுறுத்திய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் முற்போக்குச் சிந்தனையை செயலாக்கம் செய்வது இச்சிக்கலுக்கு ஏற்புடையதாக இருக்கும். இந்திய சமுகத்தினுடைய வரிசைபடுத்தப்பட்ட சமுக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தாழ்த்தப்பட்ட (ஒடுக்கப்பட்ட) சமுகத்தினரின் பாதிப்பின் விளைவாக ஏற்பட்ட சமுக விலக்கல் மற்றும் சுரண்டல் குறித்த அம்பேத்கரின் ஆழ்ந்த நுண்ணாய்வு இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலக பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏப்ரல் 30, 2011 அன்று வெளியான இலண்டன் கார்டியன்  நாளிதழின் தலையங்கத்தில் (ஆசிரியருரையில்) டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய முன்னேற்றகரமான எண்ணங்களின் அடிப்படையில் சில வரிகளை உள்ளடக்கியிருந்தது.  "எவ்வளவு காலம்தான் நாம் நம்முடைய சமுக, பொருளாதார வாழ்வில் சமத்துவம் மறுக்கப்பட்டு வாழ்வது" என அம்பேத்கர் கேட்டார். ‘‘நீண்ட காலத்திற்கு நாம் பொருளாதார ஏற்றத்தாழ்வை நிராகரிக்க வேண்டுமெனில், பேரிடர்களுக்கு மத்தியில் நாம் மக்களாட்சி அரசியலை கொண்டுவந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய இயலும்" என இலண்டன் கார்டியன் நாளிதழில் கூறப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டு இந்திய முற்போக்கு கருத்து 21 ஆம் நூற்றாண்டு பிரிட்டனுக்கு தொடர்புடையதாக இருக்கிறது.  மேலே மேற்கோளிட்டுக் காட்டப்பட்டுள்ள இலண்டன் கார்டியன் நாளிதழின் கூற்று, வாழ்க்கை குறித்த உலகளாவிய முக்கியத்துவத்தையும் டாக்டர் அம்பேத்கரின் பணியையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.  1950 – 1960களில் அமெரிக்காவில் குடியுரிமை இயக்கத்தை வழிநடத்திய மார்ட்டின் லூதர் கிங்க் இளையவரின் மகன் மூன்றாம் மார்ட்டின் லூதர் கிங்க் என்பவரும் அமெரிக்காவில் கருப்பர்களின் கல்வி வாய்ப்பை சரிவிலிருந்து உயர்த்திக் காட்ட அம்பேத்கரின் சிந்தனைகளையே செயலாக்கம் செய்தார்.  1956 ஆம் ஆண்டிற்கு பின் சென்று பார்த்தால், அம்பேத்கர் மறைந்த இரண்டாவது நாள் டிசம்பர் 8ம் தேதி "நியூயார்க் டைம்ஸ்" என்கிற நாளிதழ் அவருடைய இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த உள்ளார்ந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த சில வரிகள் அம்பேத்கரின் சிறப்புகளை இந்திய எல்லைகளுக்கு அப்பால் வெளிக் கொணர்ந்தது. "டாக்டர் அம்பேத்கர் உலகம் முழுதும் அறிந்தவர்; கௌரவிக்கப்பட்டவர்…. அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த பாதையை (சிந்தனையை) செயலாக்கம் செய்து நிறைவேற்றும் வரை அவர் வாழவில்லை. அவற்றில் சிலவற்றை செய்து முடிக்க இன்னும் சிறிது காலம் ஆகும். ஆனால் அவரது தாக்கம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013 டிசம்பர் 20ஆம் நாளன்று அல்ஜசீரா (கிறீயிணீக்ஷ்மீமீக்ஷீணீ) வலைதளத்தில் "வன்முறையைக் கைவிடும் இந்திய மாவோயிஸ்ட் குழு" எனும் தலைப்பில் என்.பானுதேஜ் எழுதி வெளியிட்ட ஓர் அறிவிப்புக் கட்டுரையில், சில மாவோயிச தலைவர்கள் டாக்டர் அம்பேத்கருடைய சிந்தனையின் தாக்கத்தால் வன்முறை செயல்களிலிருந்து தற்போது விலகி வருகின்றனர் எனும் தகவலை வெளிப்படுத்தியுள்ளார். "ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என வருணிக்கப்படும் டாக்டர் அம்பேத்கரை படிக்காததால் பெருந்தவறை இழைத்து விட்டதை தற்போது நாங்கள் உணர்கிறோம். மார்க்ஸ், இலெனின், மாவோ ஆகிய தலைவர்களின் மீது மட்டுமே எப்போதும் எங்களுடைய கவனமும் ஈர்ப்பும் படிந்திருந்தது. நாங்கள் காந்திய இயக்கத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்ற அதே வேளையில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்காக தோன்றிய வன்முறை இயக்கத்தின் மீதான அம்பேத்கரின் உலக கண்ணோட்டத்திலான நுண்ணாய்வு தனித்துவத்தை உயர்வாக கருதுகிறோம்." என மாவோயிஸ்ட் தலைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்திய புரட்சிகர (மறுமலர்ச்சி) பொதுவுடைமைக் கட்சித் தலைவர் திரு நூர் சுல்பிகார் ஒரு கட்டுரையில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான புதிய சிந்தனையிலான ஒழுங்குகைகள் (சீரமைப்புகள்) பெருகி வருகின்றன எனக் கூறியுள்ள மேற்கோளையும் நாம் உற்றுநோக்க வேண்டும். அவர் கூறியதாவது, தற்போதைய சூழலில் நமக்குத் தேவை ஆயுதப் போராட்டமல்ல. ஆனால் அதை விட பரந்த, சனநாயக மற்றும் திறந்த மக்கள் இயக்கமும் பலதரப்பட்ட மக்கள் போராட்டத்தினுடைய ஓர் ஐக்கிய முன்னணியுமே அவசியம். இதற்காக நாம் மக்களாட்சி முறைப்படி சட்ட கட்டமைப்புகளுக்குட்பட்டு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.  அல்ஜசீரா வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்ட அரசமைப்பு சட்டமா(முறையா)னது ஒடுக்கப்பட்ட மக்களின் இடையறாத சமுக, பொருளாதார குறைகளைத் தீர்ப்பதற்கு ஓர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக அமைந்துள்ளது என்பதை தெளிவாக வெளிக் கொணர்ந்துள்ளது. ஆகவேதான் இந்திய மேனாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் டாக்டர் அம்பேத்கரை ஒரு "கருணைமிக்க கிளர்ச்சியாளர்" என வருணித்துள்ளார்.அரசமைப்பு முறையை வலியுறுத்தியவர் அம்பேத்கர்: சமுக மாற்றத்தை அடைவதற்கு டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட முறைமையில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். சட்டம், சட்டவியல் திட்டங்கள், மனித உரிமை போன்றவற்றிக்கு எதிராகவும் அரசமைப்புக்கு முரணாகவும் இருக்கும் முறைமைகளை அவர் நிராகரித்தார். சாதி அடிப்படையில் பலவித துன்பங்களை அனுபவித்த டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பணியிலும் சமுக இழிவு ஆழ்ந்த பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பல நூற்றாண்டு காலமாக இந்தியச் சமுகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் மீது திணிக்கப்பட்ட அநீதிகளை சீரமைப்பதற்கு ஒரு போதும் வன்முறை வழிமுறையை அவர் பரிந்துரைக்க வில்லை. டாக்டர் அம்பேத்கர் சாதி இழிவால் புறக்கணிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகி அவமானத்தின் மொத்த உருவமாக பாதிக்கப்பட்டவராக இருந்த போதிலும் அரசமைப்புச் சட்ட முறைமைகள் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார் எனில், நாம் நம் உன்னத இலக்குகளை அடைவதற்கு வன்முறையை அல்லது வன்முறை வழிமுறைகளை நியாயப்படுத்துவது  எவ்வகையில் சரியானது? அம்பேத்கர், அவருடைய கால கட்டத்தில் சமுக, பொருளாதார அநீதிகளை அடக்குவதற்கு வன்முறை வழிமுறைகளே சரியானது என வாதிட்டு பரப்புரை  செய்த  பல சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்கள் போல் அல்லாமல், அரசமைப்புச் சட்ட முறைமைகளையே போதித்தார். மேலும் "ஒழுங்கின்மையின் (அராஜகத்தின்) இலக்கணம்" எனப்படும் அரசமைப்புச் சட்டத்திற்கு ஒவ்வாத பிற வழிமுறைகள் குறித்தும் விவரித்தார்.  சமுகப் பெருளாதார நீதியை எட்டுவதற்கு அரசமைப்புச் சட்ட முறையின் சிறந்த வருணனையாக "கற்பி – ஒன்றுசேர் – போராடு" எனும் அவருடைய முச்சொல் முழக்கம் திகழ்கிறது. பேராசிரியர் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் ட்ரெஸி எழுதிய "இந்தியா: ஒரு நிலையற்ற புகழ்" எனும் நூலில் பொதுமக்களின் நிலையை உயர்த்துவதற்கும் முறையான மக்களாட்சியை உருவாக்குவதற்கும் நீதியை நிலைநாட்டவும் அண்ணல் அம்பேத்கரின் கற்பி, ஒன்றுசேர், போராடு எனும் முச்சொற்முழக்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். "இந்திய கோடைக்காலம் : பேரரசின் இறுதிக்கால இரகசிய வரலாறு (Indian Summer: the Secret History of the End of Empire)" நூலின் ஆசிரியர் அலெக்ஸ் வோன் டுன்செல்மான் இலண்டனிலுள்ள டெலிகிராப் செய்தித்தாளில் அமர்த்தியா செனின் மேற்கூறிய புத்தகத்திற்கு பின்வருமாறு மதிப்புரை எழுதியுள்ளர். "இந்திய சுதந்திர காலகட்டத்தின் மிகச் சிறந்த மாமனிதரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கற்பி, ஒன்றுசேர், போராடு எனும் முச்சொல் வாசகத்தின் மேற்கோள்களே இந்நூலின் அறைக்கூவலாக விளங்குகிறது". இக்கூற்றின்படி, மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கு மக்களாட்சி முறைகளையும் சனநாயகத்தைச் சுற்றிப் பிணைக்கப்பட்ட உலகக் கண்ணோட்டத்தையுமே டாக்டர் அம்பேத்கர் மையங் கொண்டிருந்தார் என்பது தெளிவாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் அறிவது யாதெனில், தீவிர சமுக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உணர்ச்சிபூர்வமாக கவலை கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கர் ஐயங்களுக்கிடமின்றி மக்களாட்சி முறைப்படி அரசமைப்புச் சட்ட விதிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சமுக மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என கடுமையாக உழைத்த ஒரு சிறந்த சனநாயகவாதியாகத் திகழ்ந்தார் என்பது புலனாகிறது.ஏற்றத்தாழ்வுக்கு எதிரான நச்சுக்கொல்லி: டாக்டர் அம்பேத்கர் சமுக மாற்றத்தையும் மக்களின் அதிகாரத்தையும் வெளிக் கொணர சட்ட விதிமுறைகளை வலியுறுத்தினார். ஆகையால் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான நச்சுக்கொல்லியாக அவர் கூறிய புகழ்பெற்ற வாசகம் "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்" எனும் கோட்பாடு ஆகும். கொடூர வன்முறை செயல்களால் அருகிவரும் மக்களாட்சி மாண்புகளை அரசமைப்புச் சட்டம் எனும் கருவியின் மூலம் மீட்டுருவாக்கி சீராக்க இயலும் எனும் உயரிய அறிவை அவருடைய எழுத்துகளிலிருந்து நாம் கற்கிறோம். அம்பேத்கரைப் பொறுத்தவரையில் மக்களாட்சியின் அடிப்படை கருத்தானது ஒரு மனிதன் ஒரு வாக்கு (ஓட்டு) என்பது மட்டுமல்ல; மாறாக ஒரு மனிதன் ஒரு மதிப்பு எனும் நோக்கத்தையும் உள்ளடக்கியதே மக்களாட்சியாகும். ஆனால் அம்பேத்கர் இந்தியச் சமுகத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கும் ஒரு மதிப்பும் இருக்கின்ற அதே வேளையில் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் அவை பங்கிட்டளிக்கப் படவில்லை என்று வருந்துகிறார். பெண்ணியத்தின் பாதுகாவலர்: டாக்டர்  அம்பேத்கர்  சமுக, பொருளாதாரத்தில்  ஒடுக்கப்பட்ட மக்களின்  நலனுக்காக போராடியவர்  என்பதைத்  தவிர,  பெண்களுக்கு சம உரிமை வழங்குவதன்  மூலம்  ஆணாதிக்க இந்துத்துவ ஒழுங்குகளை சீராக்குவதற்கும் மிகத் துணிச்சலுடன்  எதிர்கொண்ட போராளி ஆவார்.  சமுகத்தில்  பிற்போக்கு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த பெண்  சமுகம், பல்வேறு காரணிகளுக்கு மத்தியில்  சமத்துவமும்  சம வாய்ப்புகளும்  பெறுவதே ஓர்  உண்மையான சமுக, பொருளாதார சமத்துவமாகும் என்பதில்  உறுதி கொண்டிருந்தார். எனவே இதற்காக இந்திய அரசமைப்பு அவையில்  பல பழைமைவாத உறுப்பினர்களின்  எதிர்ப்பையும்  மீறி, இந்து சட்ட திருத்த வரைவு (மசோதா) மூலம்  பெண்களுக்குச்  சொத்துரிமை வழங்குவது குறித்து வாதிட்டார். உண்மையில், சில இந்துத்துவ சட்டமன்ற உறுப்பினர்கள் இந்து  சமயத்தில்  பெண்களுக்கு சொத்துரிமை உத்திரவாதம்  வழங்கும்  உரிமை இல்லை என்பதைக்  காரணம்  காட்டி இந்து சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்த போது, டாக்டர்  அம்பேத்கர்  பெண்களுக்கு பொருளாதாரத்தில்  அதிகாரமளிக்கும்  வகையிலும்  சொத்துகளில்  உரிமையை உயர்த்தும்  வகையிலும்  ஸ்மிருதியையும்  சில  புராண(இதிகாச), வேத நூல்களையும் மேற்கோள்  காட்டி சம உரிமையை வலியுறுத்தினார். அவ்வாறு செய்ததன்  மூலம் பெண்களின்  அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு பண்டைய மெய்யறிவு, நவீன சட்டவியல்  ஆகிய இரண்டையும்  இணைத்து முற்போக்கான பெண்ணுரிமை சமத்துவத்தை உருவாக்கினார். பாரம்பரிய மெய்யறிவுக்கும்  நவீன சட்டவியலுக்கும்  இடையிலுள்ள ஆக்கப்பூர்வமான நல்லிணக்கத்தை அடிக்கோடிட்டுக்  காட்டி, சட்டத்தின்  முன்  பெண்கள்  உட்பட அனைவரும்  சமம்  எனும்  நவீன சட்டக்  கருத்துகளால்  பெண்ணுரிமைக்கான தீர்வை வேத நூலுடன்  கலந்த அவருடைய பார்வை மகத்தானது.அம்பேத்கரும்  பௌத்தமும் :  1956 ஆம்  ஆண்டு அம்பேத்கர்  புத்தமதத்தை தழுவினார். ஏனெனில்  புத்தமதம்  அறிவூட்டல்  (பிரக்யான்), இரக்கம்  (கருணா), சமத்துவம்  (சமதா) ஆகிய உயர்  சிந்தனைகளை அடிப்படையாகக்  கொண்டிருந்ததால் புத்த மதக்  கொள்கையை தழுவத்  தீர்மானித்தார். இந்தச்  சூழலில்  சுவாமி விவேகானந்தரின்  செயலாக்கம்  குறிப்பிடத்தக்கது. விவேகானந்தரின்  முழு படைப்பில்  தொகுதி 5இல் சமுக உயர்விற்கான நற்செய்திகளை இவ்வுலகிற்கு முதல்  முறையாக வழங்கியவர்  புத்தர்  என எழுதியுள்ளார். ஆகவே அம்பேத்கர்  புத்தமதத்தை தழுவிய போது, அவரால்  சமுக உயர்விற்கான நற்செய்திகளும்  (சுவிசேஷமும்) தழுவப்பட்டது. பேராசிரியர்  அமர்த்தியா சென் "வன்முறையும்  அதன்  அடையாளங்களும்" எனும்  தனது நூலில் எங்கு புத்தமதம்  ஆதிக்கம்  பெற்றுள்ளதோ அங்கே மனிதகுல வளர்ச்சிக்  குறியீடும்  முன்னேற்றம்  அடைந்திருக்கும்  என எழுதியுள்ளார். ஆகவேதான் நல்லறிவு, இரக்கம், சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்காக அண்ணல்  அம்பேத்கர்  புத்த மதக்  கொள்கைகளைத்  தழுவலானார். உண்மையில்  அவருடைய புத்தமதத்  தழுவலை மத நல்லிணக்கத்தின்  அடிப்படையிலும்  இந்துமத ஆன்மிகத்திற்கு நெருக்கமான மதம் புத்தமதம் என்கிற அடிப்படையிலுமே பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாக நிலைபெற்றிருந்த சமுக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமுக மாற்றத்தை வெளிக் கொணர்வதற்கான அரசமைப்புச் சட்ட முறைமைகளுக்கு மேலும் வலுசேர்க்க இந்தியச் சமுகத்தில் நல்லிணக்கமும் (சமரசமும்) உடன்பாடும் (மன ஒத்திசைவும்) அவசியப்பட்டது. ஆகவேதான் இத்தகைய நல்லிணக்கம், மன ஒத்திசைவின் அடிப்படையில் அவர் புத்தமதத்தை ஏற்றுக் கொண்டார். புத்தரை இந்து மதத்தின் ஓர் இளம் (குழந்தை) போராளி என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் இந்து மதத்திற்கு எதிரான ஓர் இளம் போராளி (கிளர்ச்சியாளர்) டாக்டர் அம்பேத்கர் ஆவார் எனக் கூறினால் அது மிகையாகாது. ஆனால் அவருடைய கிளர்ச்சியானது நாம் முதலில் குறிப்பிட்டது போன்று, கருணையின் அடிப்படையில் நம் பன்முக சமுகத்தில் நல்லிணக்கம் மற்றும் சமரசத்தை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட முறைமையின் துணையால் நிலைநிறுத்தப்பட்டது.காந்தி – அம்பேத்கர் இருவரின் புகழுரை: காந்தி – அம்பேத்கர் இருவரும் சமுகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசியல் நோக்கத்திற்காகவும் பல கருத்துகளை பொதுவான அணுகுமுறையோடு பகிர்ந்தும் ஏற்றுக் கொண்டும் உள்ளனர். இருவருமே தீண்டாமை போன்ற சமுகக் கொடுமைகளுக்கு எதிராக கடுமையாக போராடியுள்ளனர். அவர்கள் பெண்ணுரிமை சமத்துவத்தை அடைவதற்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கும் பாடுபட்டுள்ளனர். மக்களிடையே சமுக, பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்படும் வேளையில், அது மக்களாட்சி அரசியலில் பேரிடரை உண்டாக்கும் என அம்பேத்கர் கூறினார் என்றால், பொருளாதார ஏற்றத்தாழ்வினுடைய ஆழமானது குருதி தோய்ந்த வன்முறைப் புரட்சியை விளைவிக்கும் என மகாத்மா காந்தி துணிச்சலாக கூறியுள்ளார். எனவேதான் காந்தியடிகள் அற (அகிம்சை) வழியில் சமுக மாற்றத்தை உருவாக்கவும் சுதந்திரத்தை அடைவதற்காகவும் அவரால் உருவாக்கப்பட்ட பதினெட்டாவது ஆக்கப்பூர்வ திட்டத்தின் முக்கிய சரத்தாக (அம்சமாக) இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சிக்கலை முன் வைத்தார். மகாத்மா காந்தி உயர் சாதி மக்களின் இதயத்திலும் (மனதிலும்) நடத்தையிலும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான தார்மீக வேண்டுகோளை உருவாக்கிக் கொண்டிருந்த வேளையில், டாக்டர் அம்பேத்கர் சாதி அமைப்பை தகர்த்தெறிய வழி வகுக்கும் சமத்துவத்தில் ஏற்படுத்தக் கூடிய சட்டம், கல்வி, அதிகாரம் ஆகியவை மூலம் பிற்படுத்தப்பட்ட சமுகத்தை மேம்படுத்துவதற்கு கடுமையாக போராடினார். ஒரு சமயம் இறைத் தன்மை (ஆன்மிகம்)குறித்து மகாத்மா காந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஆதி திராவிடர்கள் (அரிஜன்) கோயிலுக்குள் நுழைவது மட்டுமே இறைமை ஆகாது; அவர்களின் சமுக – பொருளாதாரம், கல்வி போன்றவற்றின் முன்னேற்றமும் அடங்கியதே இறைத் தன்மை. அதேபோல காந்தியடிகள் அவர்களின் கல்வி மேம்பாட்டை விரிவாக்குவதற்காக அரிஜன் சேவை மையம் வாயிலாக ஆதி திராவிடர்களுக்கு உதவி செய்ய முற்பட்டார். நாம் இவ்விருவரின் பொதுத் தன்மையை (ஒற்றுமையை) வலியுறுத்த வேண்டும். அவர்களின் சிந்தனை அறைகளில் நீர் புக முடியாது. காந்திய அணுகுமுறையில் மிகுதியாக ஆன்மிகப் போக்கும் தார்மீகச் சிந்தனைகளும் இருப்பது தெரிகிறதெனில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை திறம்பட பயன்படுத்த பெரிதும் உறுதுணையாக விளங்கும் சட்டவியலின் ஆணிவேரைச் சுற்றியே அம்பேத்கரின் சிந்தனை அமைந்திருந்தது. "மகாத்மா காந்தி பெரும் மக்கள் திரளைத் திரட்டி விடுதலைப் போராட்டத்திற்கு வடிவமும் தார்மீகச் சிந்தனையும் வழங்கினார் எனில், சவகர்லால் நேரு இந்தியப் பொருளாதார மற்றும் சமுகவியல் பரிமாணங்களையும், டாக்டர் அம்பேத்கர் ஒரு சவாலான சமுக மறுமலர்ச்சி மக்களாட்சி கோட்பாட்டுப் பார்வையையும் வழங்கியுள்ளனர்" என மேனாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் குறிப்பிட்டுள்ளார். இது உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகளின் அளவு (வரம்பு) உயர்ந்து வருகின்ற இற்றைச் சூழலில் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் தொலை நோக்குப் பார்வையை மதித்துணர உதவியாக இருக்கும் ஓர் ஒன்றுபட்ட அணுகுமுறை ஆகும். – எஸ்.என்.சாகு, புது தில்லி.(கட்டுரையாசிரியர் எஸ்.என்.சாகு ராஜ்யசபாவின் துணைச் செயலாளர் ஆவார். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் எழுத்தாளரது சொந்தக் கருத்தாகும். இவை ராஜ்யசபா செயலகத்தின் கருத்தல்ல) "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி