பெண்கள் புரட்சியே மகளிர் நாள்! - தமிழ் இலெமுரியா

17 March 2015 7:26 pm

உலகம் முழுதும் ஆணாதிக்கம் நிறைந்திருந்த காலம். பெண்கள் ஆண்களின் அடிமைகளாகவும் வீட்டு அடுப்பங்கறையில் முடங்கிக் கிடக்கும் வேலைக்காரியாகவும் பேச்சுரிமை – கருத்துரிமை இல்லாத பேதைகளாகவும் அடக்கி ஆளப்பட்டு வந்தனர். 1900களில் உலக நாடுகளெல்லாம் தொழில்மய நகரங்களாக மாறிய போது, வளர்ந்த நாடுகளின் பெண்களின் மத்தியில் மிகப் பெரிய கிளர்ச்சியும் விமர்சன விவாதங்களும் எழுந்தன. இப்போராட்டத்தில் பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான மதிப்பு, சம உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகிய அனைத்தும் அவர்களின் புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன. அப்போது ஆரம்பித்த இப்போராட்டம் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடம் ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குகளுக்கு எதிராக இப்போராட்டம் வெடித்தது.  1908 ஆம் ஆண்டு சற்றொப்ப 15,000 பெண்கள் தங்களின் பணி நேரக் குறைப்பு, உரிய கூலி மற்றும் வாக்குரிமை கேட்டு நியுயார்க் நகரில் சோசியலிச கட்சியின் சார்பில் ஊர்வலம் சென்றனர். பின்னர் 1910 ஆம் ஆண்டு கோபென்ஹகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து மொத்தம் 100 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஜெர்மனியின் சமுகக் குடியரசு கட்சியின் மகளிர் அணித் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (சிறீணீக்ஷீணீ ஞீமீtளீவீஸீ)  ஒரு விருப்பத்தை முன்வைத்தார். அதாவது ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மகளிர் நாள்" ஒரே நாளில் ஏற்க வேண்டும்; அன்று பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இதை அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர். இதன் விளைவாகவே 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் முதன் முறையாக ஆசுதிரேலியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பன்னாட்டு மகளிர் நாள் அங்கீகாரம் பெற்றது. இதற்காக ஏறத்தாழ 10 இலட்சம் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாக திரண்டு பரப்புரையில் ஈடுபட்டனர். இறுதியில் 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் நாள் பன்னாட்டு மகளிர் நாளாக உலகம் முழுதும் ஏற்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி