பெரியார் ஓர் அறிவியல் விஞ்ஞானி! - தமிழ் இலெமுரியா

14 January 2016 9:36 pm

ஈ.வே.ரா. பெரியார் என்றதுமே,  ஓ பெரியாரா.. அவர் பிராமணர்களுக்கு எதிரி.. கடவுளை எதிர்ப்பவர்.." என்ற குறுகிய கட்டத்தில் மட்டுமே வைத்து விமர்சிப்பவர்கள் தான் அன்றைக்கும்  சரி…  இன்றைக்கும்  சரி… அதிகம். பெரியாரின் தொண்டர்களோ, பெரியார் நவீன நூற்றாண்டின் விடியலுக்கு வரவைச் சொன்னவர்.. சுயமரியாதைச் சுடரை ஏற்றிவைத்தவர்.. என்று பதிலுக்குச் சொல்லி வருகின்றனர்.  ஆனால் பெரியார், தான் படித்த படிப்பையும்  அதனால் வந்த அறிவையும், காலம் தந்த அனுபவத்தால் ஏணியாக்கினார். பிறர் ஒரு வரையறைக்குள் நின்று சிந்திக்க, அதையும் தாண்டி  அறிவியல் தொலை நோக்கில் ஆச்சரியக்குறியாக உயர்ந்து நின்றவர். இதை பெரியாரின் தொண்டர்கள்  ஏனோ உரக்கச் சொல்லவில்லை. நாத்திக வாதி என்கிற ஒரு காரணத்திற்காகவே பெரியாரின் இதர தனித்துவங்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டன.  தேசியக் கவி பாரதியார் இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே "ஆடுவோமே  பள்ளுபாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே.." என்று பாடியபோது, அந்த சமயத்தில் ‘பாரதி பைத்தியக்காரர்… இந்தியாவாவது  விடுதலை பெறுவதாவது.. ஏதோ கற்பனையில் எதையோ பாடி வைக்கிறான்" என்று கேலி செய்தனர். அவர் வாக்கு பலித்ததும்,  அவரை அரசியல் தீர்க்கதரிசி என்று போற்றினோம்… புகழ்ந்தோம். இன்றைக்கும் பெருமையுடன் கூறி வருகிறோம். அதே மாதிரி பெரியாரும் ஒரு விஞ்ஞான தீர்க்கதரிசியாக பல அறிவியல் விந்தைகள் இந்த உலகில் நடக்கும்  என்று அன்றே கணித்து அடித்துச் சொல்லியிருக்கிறார்.  ‘யாரு நம்ம பெரியாரா அப்படி சொல்லியிருக்கிறார்’ என்று கேட்கத் தோன்றுகிறதா…? பெரியாரின் உழைப்பைத் தமிழ்நாடு பயன்படுத்திக் கொண்டது. தீண்டாமையைப் போக்க, பெண் சுதந்திரம் காக்கப் பெரியார் பெரிதும் பாடுபட்டார். தீண்டாமையின் தீவிரம் தமிழ்நாட்டில் குறைந்து போனதற்கு முக்கிய காரணியாய் இருந்தவர் பெரியார். அவரது உழைப்பைப் பயன்படுத்திக் கொண்ட தமிழ்நாடு பெரியாரின் சிந்தனைகளைக் கண்டு கொள்ளவில்லை. இங்கிலாந்தில் செயற்கைக்  கருத்தரிப்பு வழியாக குழந்தை பிறந்தது 1974ஆம் ஆண்டில் தான். இந்த அறிவியல் விந்தையை 36 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து பல தர்க்கங்களை தன் மனதில் நடத்தி கடைசியில் 1938ல், 31 ஜனவரி தேதியிட்ட ‘குடியரசு‘ இதழில் பெரியார் தன் அறிவியல் கணிப்பைப் பதிவு செய்தார். இந்த பதிவுக்குப் பின், பெரியார்  கலந்து கொண்ட விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் தனது அறிவியல் கணிப்புகளை விளக்கிவந்தார். அப்போது மக்களின் சிந்தனை ‘இப்படி எல்லாம் நடக்குமா’? என்று கூட சிந்திக்க மறுத்தது. காரணம், அறிவியலில் பெரும் வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில் கூட செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கலாம் என்கிற  சித்தாந்தம்   தோன்றியதே 1970களில் தான். அப்படியிருக்கும் போது பாமரர்கள்,  பெரியாரின் அறிவியல் கணிப்புகளை 1938ல் சட்டை செய்யவில்லை என்றால் வியப்பு (ஆச்சரியம்)இல்லை.  மேலும் அப்போது தமிழகத்திலும் சரி.. வளர்ச்சி அடையாத நாடுகளிலும் சரி.. குழந்தைகளை அதிகமாகப்  பெற்றதுதான் சிக்கலே தவிர.. குழந்தை பெறுவதில் இப்போதிருக்கும் "விந்து அளவு குறைவு", கருமுட்டைகள் குறைவு போன்ற சிக்கல்கள் பெரிதாக இல்லை. இன்று, ஹார்மோன் சிக்கல்கள் தலைவிரித்து ஆடுவதால், சோதனைக் குழாய் (டெஸ்ட்ட்யூப்) முறையில் குழந்தை பெற நாங்கள் உதவுகிறோம் என்று சொல்லும் உயர்தர (ஹை -& டெக்) மருத்துவமனைகள்  தெருவுக்குத் தெரு பெருகிவிட்டன’’. இப்படியெல்லாம் நடக்கும் என்று பெரியாரால் அன்றே சிந்திக்க முடிந்திருக்கிறது.  பெரியார் 1943ல் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டார். மக்கள் இனப் பெருக்கத்திற்கு  ஆண் & -பெண் சேர்க்கை என்பது  நீக்கப்பட்டு, செயற்கை முறையில் ஊசி மூலம் ஆண் வீரியத்தை பெண் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்க வைக்க முடியும்."பெரியாரின் நிழலாக அன்று தொடர்ந்திருந்த பேரறிஞர்  அண்ணா பெரியாரின் கருத்துகளைத் தொகுத்து "இனி வரும் உலகம்" என்ற பொருத்தமான தலைப்பில் "திராவிட நாடு"  21 மார்ச்  மற்றும் 28 மார்ச் இதழ்களில் 1943 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பிறகு அவை, இனி வரும் உலகம் எனும் குறு நூலாக குடியரசு பதிப்பகத்திலிருந்து வெளியானது. அந்த நூலின் அட்டைப் படத்தை வடிவமைத்தவர்  பேரறிஞர்  அண்ணா. சோதனைக் குழாயினுள் குழந்தை இருப்பதாக அட்டைப் படம் வரையப் பட்டிருந்தது. சோதனைக் குழாய் குழந்தையுடன் பெரியார் தனது அறிவியல் சிந்தனைகளை நிறுத்தி விடவில்லை. "வீதி கூட்ட வேண்டியது கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்து விடும்… போக்கு வரவுஎங்கும் ஆகாய விமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.. கம்பியில்லா தந்திசாதனம் (மொபைல்)  ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.. ரேடியோ (மொபைலில் இருக்கும் FM) ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும்… உருவத்தைத் தந்தியில் (E-mail / தொலைக்காட்சி / இன்டெர்நெட்) அனுப்பும் படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.. மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்கு ( Video Conference) கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்… உணவுகளுக்குப் பயன் படும் படியான உணவு, சத்துப் பொருள்களாக சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும். (விண் வெளி வீரர்கள் காப்சூல் மூலம் உணவு உண்கிறார்கள்)… பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப் படுத்தப் படலாம்.  அல்லது விசை சேகரிப்பாலேயே (சூரிய ஒளி மூலம் மின்சாரம்) ஓட்டப் படலாம் …‘ என்று முன் உணர்ந்து சொன்னவர் பெரியார். அவையெல்லாம் நூற்றுக்கு நூறு பலித்திருக்கின்றன. அன்றைய சூழ்நிலையில், தன் முன் இருப்பது தான் பூரண உலகம்; அதுவே போதும்; அதற்கு மேல் எந்த மாற்றமும் வளர்ச்சியும் வராது என்று பெரியார் நின்று விடவில்லை. புதியவற்றில் ஆர்வம் காட்டி அறிவியல் தாகத்துடன், தாக்கத்துடன் சிந்தித்ததன் விளைவாக, வரவிருக்கும்  அறிவியல் விந்தைகள் மனத்தில் விரிந்தன.  அது மாதிரியான அறிவியல் சிந்தனைகள், யாருக்கும் தோன்றுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே பெரியாருக்கு புலப்பட்டு விட்டது. மறக்காமல் அவற்றைப் பதிவும் செய்தார்.   ஆக, பெரியார்   ஓர் "அறிவியல்"  பெரியாராகவே இருந்திருக்கிறார். தமிழகம் தான் அவரை வெவ்வேறு கோணங்களில் பார்க்க மறுத்து விட்டது. – காஜா நஜீமுதீன், கொச்சின்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி