15 September 2015 4:41 pm
ஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் கடவுளைக் காண்கிறேன். ஒரு தொழு நோயாளியைத் தொடும் போது இறைவனையே தொடுவது போல் உணர்கிறேன்"- அன்னை தெரசா. உலக உயிர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்திய அன்னை தெரசா – பிறப்பில் அல்பேனியராகவும் குடியுரிமையில் இந்தியராகவும் நம்பிக்கையில் கத்தோலிக்கராகவும் சேவையில் உலகத்துக்குப் பொதுவானவராகவும் வாழ்ந்தவராவார். தன் 24 வயதில் காசநோயால் இறந்து, பிரான்சு நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய தெரசா மார்ட்டின் எனும் தனது தோழியின் நினைவாக வைத்துக் கொண்ட பெயர்தான் ‘தெரசா’, இவரது இயற்பெயர் ‘ஆக்னஸ் கோன்சா பொஜாகின்’. தனது 12 வயதிலேயே அன்பு, கருணை, எளிமை இம்மூன்றை நெஞ்சில் நிறுத்தி, தன் சமுக சேவையை தொடங்கிய அன்னை தெரசா 1929 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்திலுள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தடைந்தார். பதினேழு ஆண்டுகள் கல்கத்தாவிலுள்ள லொரோட்டா பள்ளியில் பணியாற்றிய தெரசா, ஏராளமான நல்ல அனுபவங்களைப் பெற்றார். 1942 – 43 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பஞ்சம் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கையில் வேலையின்றி, பணமின்றி, பசிக்கொடுமை தாங்காமல் பல முதியவர்கள் மயக்கத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒரு புறம் போர், இன்னொரு புறம் பஞ்சம், மற்றொரு புறம் இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. பஞ்சத்தின் பிடியில் இருந்த மக்களை விடுவித்து அவர்களுடைய சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என சிந்திக்க ஆரம்பித்தார்! ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அந்த சிக்கலான விதிமுறைகள் தெரசாவின் சேவையை முழு நேரமாகவோ அல்லது அதிக நேரம் செலவழிக்கவோ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக லொரேட்டாவில் இருந்து விலகி அங்கிருந்து வெளியேறினார். "இனிமேல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் எந்தத் தடையும் இல்லை" என உற்சாகம் பொங்க கூறிக்கொண்டார் தெரசா. ‘ஐந்து ரூபாய் பணம். நீல நிறத்தில் மூன்று சேலைகள்’ – இதுவே தெரசாவின் சொத்து லொரேட்டாவில் இருந்து வெளியேறிய போது. பின்னர், தெரசாவின் மாணவிகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. அவர்கள் அனைவருமே லொரோட்டாவின் முன்னாள் மாணவிகள். அவர்கள் குடிசை வாழ் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவோம் என்று தீர்மானித்தனர். 1949ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்கிற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்று, முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார். "விரைவில் இந்த பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்க இருக்கிறேன். அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது. நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்தப் பெண் இறக்க நேரிட்டாள். இந்த கோரச் சம்பவத்தை அனுபவித்த அன்னை தெரசா "சிறிய அளவில் மருத்துவமனை" ஆரம்பிப்பது என முடிவு செய்தார். அரசாங்கமே முடியாமல் விட்டு வைத்துள்ள சூழ்நிலையில் கடுமையாக முயற்சி செய்தால் சாத்தியமாகி விடும் என்று தனக்குத்தானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று "உபரி மருந்துகளை கொடுத்து உதவுங்கள். எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்" என்று உதவிக் கேட்டார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெருத் தெருவாகப் போய் நிதி கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் நின்று நிதி கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு "தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்". அப்போது சற்றும் மனம் தளராமல் "மிக்க நன்றி! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்" அந்தக் கடைக்காரர் "இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்" என்று கூறி, நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன. உலகப் புகழ்வாய்ந்த நோபல் பரிசு பெறுபவர்களுக்காகக் கொடுக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அன்னை தெரசா, அதற்கு செலவழிக்கப்படும் தொகையான 1, 92, 000 டாலர்களை இந்தியவிலுள்ள ஏழைகளுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த மகிழுந்தை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு வாகனத்தில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்த மகிழுந்தை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார். அக்டோபர் -7, 1950 இல் அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷனரி ஆப் சாரிட்டி’க்கு அனுமதி அளித்தது வாடிகன் நகரம். இதன் மூலம் ஆதரவற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும் கருணை இல்லம் உருவாக்க விரும்பிய தெரசா அரசாங்க உதவியுடன் ‘காளிகட்’ என்னுமிடத்தில் "காளிகட் இல்லம்" ஒன்றை ஆரம்பித்தார். 1955 ஆம் ஆண்டு சிசுபவன் எனும் குழந்தைகள் காப்பகமும், 1957 ஆம் ஆண்டு தொழு நோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையையும் தொடங்கினார். மேலும் ‘தொழு நோயாளிகள் தினம்’ என்கிற ஒன்றை அறிவித்து அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தினார். சேவைக்காக உலகம் ஒரு சுற்றுப் பயணம்: 1963இல் ஏழைச் சிறுவர்களுக்கான தனி பள்ளிக்கூடம் ஜீலியன் ஹென்றி மற்றும் பிஷப் ஆல்ஃப்ரட் ஆகியோரது உதவியுடன் கட்டப்பட்டது. 1965இல் வெனிசூலாவில் இருக்கும் ஏழைகளின் குடிசை பகுதிகளுக்குச் சென்று தங்கி சேவை செய்தார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா சென்று போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், சிறைக் கைதிகள் மற்றும் அன்புக்கு ஏங்கும் அனாதைக் குழந்தைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு கிடைக்க வழிவகுத்தார். 1970 இல் ஐந்து கன்னியாஸ்திரிகளுடன் ஜோர்டன் நாட்டு அகதிகளுக்கும், அதே ஆண்டில் இலண்டன் சென்று அங்கு சாலையோரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்தவர்களுக்கும் பணிவிடை செய்தார். 1971 இல் மேற்கு பாகிஸ்தானில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததுடன், ஆதரவற்ற பெண்களுக்குத் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சிறு தொழில்களையும் கற்றுக் கொடுத்தார். 1973 இல் எத்தியோப்பியாவுக்குச் சென்று அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். அதே ஆண்டு ஜோர்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மொரீஷியஸ், இஸ்ரேல், பெரு, ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் 1981 இல் ஜப்பான் தலைநகரான டோக்கியோவிலும் 1988 இல் ரஷ்யா, க்யூபா ஆகிய நாடுகளிலும் தனது சேவை மையங்களை ஆரம்பித்தார். 1988 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற தெரசா ‘எனக்கு வெள்ளை, கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் எனகிற எந்த வித நிற பேதமும் கிடையாது. நாம் எல்லோரும் அன்பைப் பெறுவதற்காக, அன்பு செலுத்துவதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்’ என்று பரப்புரை செய்தார். 1991 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஈராக் அதிபர்களுக்கு வளைகுடாப் போரை நிறுத்த வலியுறுத்தி கடிதம் எழுதினார். இவ்வாறுஉலகம் முழுதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வத் தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன. மார்ச் 13, 1997இல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் சகோதரி நிர்மலாவிடம் ஒப்படைத்துவிட்டு சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா. ஒரு கூட்டத்தில் அன்னை தெரசாவுக்குப் பின் என்ன? என்று ஒரு பெண்மணி கேட்க, அதற்கு அவர் தந்த பதில், ‘தெரசாவுக்குப் பின் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி!’"