16 August 2014 10:44 am
ஞானியாரடிகள் (1873- 1942) ஞானியார் சுவாமிகளின் முழுப் பெயர் சிவ சண்முக மெய்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்பது. திருக்கோவிலூர் ஆதீனத்தின் தலைவராயிருந்தார். இவர் வட மொழியிலும் தென் மொழியிலும் புலமை பெற்றவர். முருகன் சேவடி வருடியுருகும் ஈர நெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணீறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர்விக்குந் திருமேனியும் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு காண்பாருள்ளம் கவர்வது. முருகன்: இச்சொல்லுக்குப் பொருள் "தெய்வம்" என்பது. வடமொழியில் கூறினால்தான் நம் மக்கள் அறிகின்றனர். நம் தாய்மொழியாகிய தமிழ் மொழியை நாம் அறிகின்றோமில்லை. "லாயத்தில் குதிரை" என்கின்றோம். "லாயம்" தமிழ்ச் சொல் அன்று. வெவ்வேறு அரசியலிருந்த காலங்களில் வெவ்வேறு மொழிகள் தமிழ் நாட்டினுள் நுழைந்தன. ஆங்கிலப் பள்ளியையும் அறியாது வீட்டினுள் அடங்கிக் கிடக்கும் பெண்களும், டயத்துக்கு வரலையே என்கிறார்கள். இங்ஙனம் வேற்றுச் சொல் வேகமாக நம் தமிழ்மொழியில் புகுகின்றன. யாவரும் இதைக் கவனித்தல் வேண்டும். ஈ.த.இராஜேசுவரி அம்மையார் (1906 – 1955) இராஜேசுவரி அம்மையார் அறிவியல் மழை பொழிந்த மேகம். தமிழ் இலக்கிய நூல்களில் மறைந்துள்ள அறிவியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் காட்டியவர். தமிழ் இலக்கியம், அறிவியல் ஆகிய இரு துறைகளிலும் இவர் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல் காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியலுண்மைகளைத் தெளிவு படச் சொற்பொழிவாற்றுவதில் வல்லார். அறிவியல், அம்மையாரிடம் தமிழில் எளிமையாய்ப் பணியாளானதை யாவருமறிவர். இவ்வம்மையார் மேரி இராணியார் கல்லூரியில் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றி இளமையில் மறைவுற்றார். "சூரியன்" "பரமாணுப் புராணம்" போன்ற பல அறிவியல் நூல்களை இவர் எழுதியுள்ளார். "இந்நிலவுலகில் ஞாயிறு ஒன்றே முதன்மை பெற்றும், மேன்மையுற்றும், சிறந்து விளங்குகிறது. அனைத்திற்கும் அடிப்படையான இதனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். எத்தேசத்தினராயினும் சரி, எம்மதத்தினராயினும் சரி, எத்தொழிலாராயினும் சரி, எத்தன்மையாராயினும் சரி, ஞாயிற்றைக் கண்டு களிக்காதவர் இல்லை. நீரற்ற கடுங்கானலில் நெருப்பெனக் கொளுந்துவிடும் முதுவேனில் கொடுமையில் தீய்ந்து வருந்துவோரும் வருந்தும் அச்சமயத்தில் பகலவனைப் பழிப்பாராயினும் சில நாட்கள் வரையில் சூரிய வெளிச்சமே இல்லாது இருண்டு போகும்படி விடாமழை பெய்யுமாயின் எப்போது கதிரவனைக் காண்போம் என்றே ஏங்கிக் கிடப்பர்.கா.சுப்பிரமணிய பிள்ளை (1889 – 1945) பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எம்.ஏ பட்டம் பெற்றுச் சட்டத்தில் எம்.எல். பட்டமும் பெற்று, சட்டக் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த அறிவாளர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சட்டத்திலும் சிறந்த புலமைபெற்று விளங்கியதோடன்றிப் பல நூல்களும் எழுதியுள்ளார். இவர் விரிவான முறையில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியுள்ளார். அரிய தமிழ் ஆராய்ச்சி செய்து பல நூல்கள் எழுதியுள்ளார். எளிமையான தோற்றமும் அடக்கவுணர்வும் கொண்டவர். "தமிழ்மொழி நன்கு பேணப்படுதற்கு அதனைத் தாய்மொழியாக உடைய தமிழர் முன்னேற்றமடைய வேண்டும். முன்னேற்றம் அடைவதற்குத் தமிழரது பொருளாதார நிலை சிறக்க வேண்டும். அது சிறத்தற்குத் தமிழருள் செல்வர்களாயிருப்பவர்களும், சொல்லாற்றல் உடையவர்களும் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் வருந்தாதபடி அவரவர்க்கு உரிய தொழிலும் உணவும் அளித்தற்கேற்ற வாயில்களை வகுக்க வேண்டும். தொழில் வளர்ச்சியே வறுமையை எளிதில் ஒழிக்கும். தக்க தொழிலாளிகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கத்தக்க ஏற்பாடுகள் சமுதாயத்தில் அமைந்திருக்க வேண்டும்!" – (தமிழர் சமயம்)எஸ்.வையாபுரி பிள்ளை (1891 – 1956) தமிழ் ஆராய்ச்சித் துறையில் தனியிடம் பெற்று விளங்கும் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை தமிழிலும் சைவத்திலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் தமிழ்த் தொண்டு ஆற்றப் புகுந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை இவரியற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று அதைச் சிறந்த முறையில் பதிப்பித்தவர். "துயிலுணர்ந்தவுடன் நீராடுதல், இக்காலத்து, கிராமாந்தரங்கள் போலவே, பண்டைக்காலத்தும் வழக்கமாக இருந்தது. மணலினால் செய்த பாவைக்குப் பூக்களை அணிந்து, நீராடுகின்ற பெண்களோடு தானும் கைகோர்த்து, அவர்கள் சேர்ந்து நின்ற இடத்தே தானும் சேர்ந்து நின்று, அசைந்து நின்ற இடத்தே தானும் அசைந்து நின்று, கபடமற்ற மனிதராகிய அப்பெண்களின் கூட்டத்தோடு நீர்த்துறையிலே (நீரோடு நெருங்கித்) தாழ்ந்துள்ள மருதமரக்கிளைகளில் ஏறி, கரையில் உள்ளவர் திகைக்க, தண்ணீர் சிதர்ந்து பரவ, ஆழ்ந்த குளத்திலே ஒருவன் துடும் என்ப்பாய்ந்து குளித்த செய்தி ஒன்று புறநானூற்றிலே (243) அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தெழுந்த பாவை நோன்பு அதிகாலையில் நிகழ்ந்த இந்நீராட்டினை அடிப்படையாகக் கொண்டதே. – (தமிழர் பண்பாடு)"