15 October 2015 1:58 pm
உலகில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு, அவன் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டு வெற்றியும் அடைந்திருக்கிறான். நாகரிகம் இல்லாத பழங்குடிகளாக காடுகளில் திரிந்த காலங்களில், காட்டு விலங்குகளின் தாக்குதல்கள், இயற்கைச் சீற்றங்கள் என பல பாதிப்புகளைத் தாண்டி, இன்று, நாகரிகம் அடைந்து மிக உயர்ந்த நிலையை எட்டிய மனிதன், செயற்கை கோள் வழியாக விண் வெளியில் உள்ள கிரகங்களுக்கும் சென்றிடும் ஆற்றல் பெற்றவனாக திகழ்கிறான். காட்டு விலங்குகள் பல வீட்டில் வாழும் விலங்காகவும் மனிதனோடு உழைக்கும் விலங்குகளாகவும் அவற்றை இன்று பழக்கியுள்ளான், ஆனால் பாம்பு இனத்தை மட்டும் மனிதன் ஏதும் செய்ய முடிய வில்லை (விதி விலக்காக ஒரு சில பாம்பாட்டிகள், பாம்பு பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்) கண்ணாடி அறையில் நாள் கணக்கில், பாம்புகளோடு மனிதன் வாழ்வதை, இன்றைய உலகில் ஒரு சில இடங்களில் நடப்பதை, பத்திரிகைகளில் நாம் படித்திருக்கிறோம். இவை எல்லாம் தகுந்த பயிற்சியுடன் செய்யப்படுபவை மற்றும் நச்சு முறிவுக்கு பல காட்டு மூலிகைகளை, பாம்பாட்டிகள், பாம்பு பிடிப்பவர்கள் பயன்படுத்தி வருவதால், அவர்களால் இது சாத்தியமாகிறது. பொதுவாக மனிதன் இன்றைய சூழலில் கூட பாம்பு என்றால் அலறி அடித்து ஓடுபவனாகவே இருக்கிறான். பாம்பு இனத்தின் மீது அச்சம் கொண்டவனாகவே உள்ளான். அச்சத்தின் வெளிப்பாடாக, தான் வாழும் நகரங்களின் பெயர்களை நாகர்கோவில், நாகப்பட்டினம் எனவும் மனிதர்களின் பெயர்களை நாகப்பன், நாகலிங்கம், நாகஜோதி, நாகராசன், நாகம்மை, நாகமணி இப்படி பல பெயர்களில் வழங்கியும், தான் வணங்கும் கடவுளர்களுக்கும் சிவனுக்கு பாம்பை மாலையாகவும், முருகனின் காலடியில் படம் எடுத்தபடியும், பெண் தெய்வங்களுக்கு சிலை வடிக்கும்போது பாம்புடனும், சோதிடர்கள் தோசங்களில் நாக தோசம், இருப்பதாக சில சாதகங்களை கணிப்பதும் மனிதன் எந்த அளவுக்கு பாம்பைப் பற்றி இன்று வரை பயந்து வருகிறான் என அறியமுடிகிறது. திரைப்படங்கள், நாவல்கள், சிறுகதைகள் என பாம்புகளைப் பற்றி ஏராளமான செய்திகள் உண்டு. சரி அப்படி என்னதான் பாம்பு இனத்தில் ஆச்சரியம் இருக்கிறது? நாமும் பாம்பைப் பற்றி சிலவற்றை அறிந்திடலாம் வாங்க… பத்து அங்குலம் நூல்பாம்பு முதல் இருபத்தியெட்டு அடி கொண்ட ‘அனகோண்டா’ வரை ஏராளமான பாம்பு வகைகள் உள்ளன. பாம்புகளில் இராஜநாகம் என ஒருவகை இனம் உண்டு. அது பறவையைப் போன்று கூடுகட்டி, முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சுபொரிக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமன்றி பறந்துச் செல்லும் ஆற்றலும் உண்டு. இந்த வகை பாம்பு இனம் இந்தியா, மலேசியா, தென் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் பிலிப்பைன்ஸ், தென் ஆசியா, வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் காணக்கிடைக்கின்றன. இந்த இராஜநாகத்தில் நூற்றுக் கணக்கான வகைகள் உண்டு. இவைகள் அதி புத்திசாலிகளாகவும் திகழ்கின்றன. இது முன்னூற்று ஐம்பது அடி தொலைவில் உள்ள எந்த உருவத்தையும் பொருளையும் இனம் கண்டு கொள்ளும் திறன் மிக்கது. இராஜநாகத்தின் உணவு: சிறிய இன பாம்புகள், பறவைகள், ஒணான், அணில் போன்ற உயிரினங்களை உணவாக உட்கொள்ளும். இது தனது இன விருத்திக்காக ஆண்-, பெண் இராஜநாகம் இணையும் போது, தாழம்பூ வாசம் மற்றும் உளுந்து பயிர் வாசம் போன்ற சில வாசம் வரும். இதை கிராமங்களில் வாழும் விவசாயிகள் மிகச் சரியா அறிந்து கொண்டு காட்டுக்கு செல்லும்போதும் வரும்போதும் சற்று ஒதுங்கியே சென்றிடுவர். இராஜநாகமானது தனக்கு மனிதன் மற்றும் மிருகத்தினால் தொல்லைகள் வரும்போது, தனது வாலை பூமியில் அழுத்தி உடலின் மற்ற பாகங்களை ஆறடி உயரத்திற்கு எழும்பி வெகுண்டு எழுந்து எதிர்ப்பட்டோரை கடித்து நஞ்சைப் பாய்ச்சிவிடும். ஒரு முறை கடித்தால், ஏழு மி.லி. அளவுக்கு நஞ்சை வெளிப்படுத்தும். இதன் நஞ்சானது ஒரு பலம் கொண்ட யானையையும் இறக்கச் செய்யும். மனிதர்களில் இருபது மனிதனைக் கொன்றிடும் அளவுக்கு கடுமையான நஞ்சு என மருத்துவ உலகம் கூறுகிறது. கடுமையான நஞ்சுதனை பாய்ச்சும் இந்த பாம்புகள் வலிய வந்து யாரையும் கடிப்பதில்லை, மனிதனைப் பார்த்தால் ஒதுங்கியே செல்லும். இது 18 அடி வரை வளரக்கூடியது. யாராவது சீண்டினால் மட்டுமே சீறும் குணம் கொண்டவை இதனால்தான் சில பாம்புகளை ‘நல்ல’ பாம்பு என்று சொல்கிறார்களோ? – எழிலன்