25 July 2013 3:55 pm
காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆப்பிரிக்கா கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நாடாக காங்கோ மக்களாட்சிக் குடியரசு விளங்குகிறது. இந்நாட்டின் மேற்கே காங்கோ குடியரசும், வடக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சூடான் ஆகிய நாடுகளும், கிழக்கே உகாண்டா, ருவாண்டா ஆகிய நாடுகளும், தெற்கே சாம்பியா, அங்கோலா ஆகிய நாடுகளும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் கிழக்கே அமைந்துள்ள தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது. கின்ஷாசா இந்நாட்டின் தலைநகராகவும், நாட்டின் பெரிய நகரமாகவும் திகழ்கிறது. இதன் நாணயம் காங்கோலீஷ் ஃப்ராங்க் (சிடிஎப்) ஆகும். சற்றொப்ப 9,05,351 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 2013 ஆம் ஆண்டில் 7,55,07,308 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு 19வது இடத்தில் உள்ளது. இந்நாட்டின் ஆட்சி மொழியாக ஃபிரெஞ்சு விளங்குகிறது. காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ ஆற்றுப் படுகையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
முதன் முதலில், பான்டு மொழி பேசக்கூடிய மக்கள் அதிகமாக இடம் பெயர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்தும், சூடானிலிருந்தும் டர்ஃபர் (Darfur), கோர்டோஃபன் (Kordofan) ஆகிய இனக் குழுக்கள் மிகுதியாக இடம்பெயர ஆரம்பித்தனர். இதன் மூலம் இங்கு 200க்கும் அதிகமான இனக்குழுக்கள் வசிக்கலானர். இதன் அடிப்படையில் 16 ஆம் நூற்றாண்டில் லுபா அரசாட்சி உருவானது. அதே போன்று 18 ஆம் நூற்றாண்டில் குபா கூட்டரசும் மிகுந்த வலிமை பெற்றிருந்தது. இவ்விரு பேரரசுகளும் கனிம வளங்களிலும், ஆட்சி அதிகாரத்திலும் மிகுந்த வலிமை பெற்றிருந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1877 ஆம் ஆண்டு பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட், காங்கோ நதியை ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்ட சர் ஹென்றி மார்டன் ஸ்டேன்லிக்கு நிதி வழங்கியதைத் தொடர்ந்து இங்கு ஐரோப்பிய குடியேற்றம் ஆரம்பமானது.
1885 ஆம் ஆண்டு நடத்தப் பெற்ற பெர்லின் மாநாட்டில், காங்கோ ஃபிரி ஸ்டேட் என அறிவிக்கப்பட்டு அதன் அதிபராக லியோபோல்ட் அங்கீகரிக்கப்பட்டார். லியோபோல்ட் ஆட்சியின் போது, பல்வேறு கட்டுமானப் பணிகள் குறிப்பாக தலைநகர் லியோபோல்ட்லே (தற்போது கின்ஷாசா என அழைக்கப்படுகிறது) விலிருந்து நாடு முழுவதும் இரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் இரப்பர் தேவை அதிகரிப்பின் விளைவாக, காங்கோ ஃப்ரி ஸ்டேட் மக்கள் இரப்பர் தயாரிக்கும் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் பட்டனர். இரப்பர் தொழிலில் ஈடுபடாத ஊள்ளூர் மக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதனால் மேற்கத்திய நாடுகள் பல (குறிப்பாக இங்கிலாந்து) காங்கோவை குடியரசு நாடாக அறிவிக்க வலியுறுத்தியதன் விளைவாக, 1908 ஆம் ஆண்டு பெல்ஜியம் பாராளுமன்றம் காங்கோ ஃப்ரி ஸ்டேட் அதிபர் லியோபோல்டை பதவி நீக்கம் செய்தது. மேலும் காங்கோவை பெல்ஜியம் அரசு சட்டத்தின் கீழ் இயங்கும் பெல்ஜியக் குடியரசாக அறிவித்தது. அன்று முதல் பெல்ஜியன் காங்கோ என அழைக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது காங்கோலியன் இராணுவம், வட ஆப்பிரிக்காவிலுள்ள இத்தாலியர்களுக்கு எதிராக பல வெற்றிகளைக் குவித்தது. இறுதியில் 1960, சூன் 30 ஆம் நாள் முழு விடுதலை அடைந்தது.
1965 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் மொபுடு (Mobutu) ஆட்சியைக் கைப்பற்றினார். 1971 ஆம் ஆண்டு நாட்டின் பெயரை சாயர் (Zaire) என மாற்றினார். இது கடந்த 11 ஆண்டுகளில் 4வது முறையாக பெயர் மாற்றப்பட்டதாகும். பின்னர் 1996 ஆம் ஆண்டு ருவாண்டா உள்நாட்டுப் போர், இனப் படுகொலை காரணமாக பலர் கிழக்கு சாயருக்கு தப்பி ஓடினர். மேலும் பலர் அகதிகளாகப்பட்டு பல முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த உள்நாட்டுப் புரட்சியின் மூலம் கலிபா, தலைநகர் கின்ஷாசா வரை அணிவகுத்து முன்னேறியதையடுத்து, அதிபர் மொபுடு நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். பின்னர் கலிபா அவரே தன்னை காங்கோவின் அதிபராக அறிவித்துக் கொண்டு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயரை மாற்றினார்.
1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட “இரண்டாம் காங்கோ போர்” காரணமாக, நாடு முழுவதும் பெரும் சேதம் அடைந்தது. இதை “ஆப்பிரிக்கன் உலகப் போர்” எனக் கூறலாம். ஏனெனில் இந்தப் போரில் 9 ஆப்பிரிக்க நாடுகளும், 20 இராணுவக் குழுக்களும் பங்கேற்றன. இப்போர் 2003 இல் முடிவுக்கு வந்தாலும் 2007 வரை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் போர் தொடர்ந்த வண்ணமே நிழவியது. போர்க் காலங்களில் சற்றொப்ப 5.4 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் போரில் கொல்லப்பட்டவர்களை விட 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மலேரியா, டைரியா, மார்புக் காய்ச்சல், ஊட்டச்சத்துக் குறைவு போன்ற நோய்களால் உயிரிழந்தனர்.
காங்கோ மக்களாட்சி குடியரசு ஏழை நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு சுரங்கத் தொழில், விவசாயம், காப்பி, இரப்பர் பருத்தி ஆகியன முதன்மைத் தொழில்களாகும். கங்கோ மக்களாட்சிக் குடியரசு பூமத்திய ரேகையின் அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக மழை பொழியும் நாடாகத் திகழ்கிறது. இங்கு அமைந்துள்ள காங்கோ நதிக்கரை அமோசான் காடுகளுக்கு அடுத்தபடியான உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் கொண்ட பகுதியாகத் திகழ்கிறது. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 95 விழுக்காட்டினர் கத்தோலிக்க கிருத்தவர்கள் ஆவர். இதன் மூலம் ஆப்ரிக்கா கண்டத்தின் இரண்டாவது அதிக கிருத்தவர்களைக் கொண்ட நாடாக காங்கோ மக்களாட்சிக் குடியரசு திகழ்கிறது.
இங்கு வாழும் தமிழர்கள் ஒன்றாக இணைந்து தலைநகர் கின்ஷாசாவில் “தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்” ஒன்றை நிறுவி, அதன் மூலம் விழாக் காலங்களில் அனைத்து தமிழர்களும் ஒன்று கூடி கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவுகள் மற்றும் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.